ராகி ரொட்டி. ம்ம்ம். நினைக்கும் போதே நாவில் நீர் ஊறக்கூடிய சுவை கொண்டது. சத்தான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், டயட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்ற அருமையான உணவு இது. எங்கள் வீட்டில் இந்த ராகி ரொட்டியை டீ டைம் ஸ்நாக்காக அல்லது இரவு டின்னருக்கு தயாரிப்பது வழக்கம். மழை பெய்து கொண்டிருக்கும் போது, சுடச் சுட அம்மா செய்து கொடுக்கும் இந்த ராகி ரொட்டிகளை நிறைய விரும்பி சுவைத்திருக்கிறேன்.
தேவையான பொருட்கள்:
- ராகி மாவு – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – சிறிது
செய்முறை:
- ராகி மாவை சலித்துக் கொள்ளவும்.
- மாவுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் மாவுடன் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
- மாவில் ஓரளவு ஈரப்பதம் வந்த உடன் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசைந்து ஒரே பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
- இப்போது சிறிய எலுமிச்சை அளவிலான மாவைக் கையில் எடுத்து, உள்ளங் கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி வட்ட வடிவிலான தட்டு போல் ஆக்கவும்.
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடேற்றவும்.
- வட்ட வடிவில் தட்டிய மாவை, தோசைக் கல்லில் இட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும்.
- இதே போல் எல்லா மாவையும் ரொட்டிகளாக தட்டிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
எனது மற்ற டிபன் வகைகள்…
